ஷா ஆலம், நவ. 20 - விவசாய நிலங்களில் உள்ள வீடுகளை ‘ஹோம்
ஸ்தேய்‘ எனப்படும் தங்கும் விடுதிகளாகப் பயன்படுத்துவோருக்கு
பிரத்தியேக வரிகாட்டியை மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
விவசாய நிலங்கள் விரும்பம் போல் ஆக்கிரமிக்கப்படாமலிருப்பதை
உறுதிசெய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
நெல் வயல்கள் போன்ற விவசாய நிலங்களில் ஹோம் ஸ்தேய்
தங்குமிடங்களை அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
மாநிலத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில்
ஹோம் ஸ்தேய் தங்குமிடங்களின் உருவாக்கம் உயர்வு கண்டு
வருகிறது.
உரிமையாளர்கள் விருப்பம் போல் விவசாய நிலங்களில் அத்தகைய
விடுதிகளை நிர்மாணிப்பதை அரசாங்கம் வெறுமனே பார்த்துக்
கொண்டிருக்க முடியாது. அவர்கள் சட்டங்களுக்கு ஏற்ப செயல்பட
வேண்டும். அதே சமயம் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில்
அவர்களுக்கு உரிய உதவிகளையும் நாம் செய்தாக வேண்டும் என அவர்
குறிப்பிட்டார்.
ஆகவே, நெல் வயல்களில் தங்கும் விடுதிகளை நடத்துவோருக்கு உதவும்
வகையிலான வழிகாட்டியை உருவாக்குவது குறித்து ஆராயும்படி ஊராட்சி
மன்றங்களை நான் பணித்துள்ளேன். உணவு உத்தரவாதம்
தொடர்புடையதாக உள்ளதால் விவசாய நிலங்கள்
ஆக்கிரமிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்று அவர்
சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று பெர்மாத்தாங் உறுப்பினர் நுருள்
ஷியாஸ்வானி நோ எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில்
அவர் இவ்வாறு சொன்னார்.


