ஷா ஆலம், நவ. 20- சொத்துகளை அறிவிக்கத் தவறிய வழக்கிலிருந்து மறைந்த துன் டாயிம் ஜைனுடினை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 254வது பிரிவின் கீழ் நீதிபதி அஸூரா அல்வி இந்த உத்தரவை பிறப்பித்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் வழி மறைந்த துன் டாயிம் வழக்கிலிருந்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என அது குறிப்பிட்டது.
பல சொகுசு கார்கள், கோலாலம்பூர், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கெடாவிலுள்ள நிறுவனங்கள் மற்றும் நிலங்களை அந்த சொத்துகள் உள்ளடக்கியிருந்தன.
தனது கணவருக்கு எதிரான குற்றச்சாட்டில் நீதி நிலைநாட்டப்படுவதற்கு ஏதுவாக சொத்துகளை அறிவிக்கத் தவறியது தொடர்பான இந்த வழக்கு தொடரப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் நிதியமைச்சரின் மனைவி முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
தனக்கு என்ன நேர்ந்தாலும் இந்த வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தன் கணவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததாக தோ புவான் நாயி‘மா அப்துல் காலிட் கூறியிருந்தார்.
மெனாரா இல்ஹாம் உள்பட கோலாலம்பூர் மற்றும் பினாங்கிலுள்ள பல சொத்துகளை அறிவிக்கத் தவறியதாக தங்களுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை டாயிமும் அவரின் மனைவியும் மறுத்து விசாரணை கோரியிருந்தனர்.


