கோல திரங்கானு, நவ. 20- திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 2,765 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 212 பேராக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 603 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் 14 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக திரங்கானு மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் செயலகம் தெரிவித்தது.
கெமமான் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 554 குடும்பங்களைச் சேர்ந்த 2,584 பேர் ஐந்து துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ள வேளையில் உலு திரங்கானுவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் ஆறு நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக அது குறிப்பிட்டது.
செத்தியூ மாவட்டத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் ஒரு துயர் துடைப்பு மையத்தில் தங்கியுள்ள வேளையில் மாராங்கில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் ஒரு மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
இதனிடையே தும்பாட் ஆற்றின் கெமமான் கம்போங் பாரு கெமாசிக் ஆற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவான 1.9 மீட்டரைத் தாண்டி 2.26 மீட்டராக பதிவாகியுள்ளது.


