ஷா ஆலம், நவ. 19 - அடுத்தாண்டு அமல்படுத்தப்படவிருக்கும் புதிய
சுற்றுச்சூழல் கொள்கைகளின் வாயிலாக கூடுதலாக 7 கோடியே 20 லட்சம்
வெள்ளி வருமானத்தை ஈட்ட முடியும் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் வாயிலாக
அமல்படுத்தப்படவிருக்கும் சுழியம் வெளியேற்றக் கொள்கை மற்றும்
மாசுபடுத்துவோர் செலுத்தும் கொள்கையின் கீழ் விதிக்கப்படும் புதிய
கட்டணங்கள் இந்த வருமான உயர்வுக்கு வழி வகுக்கும் என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
லுவாஸ் புதிய வருமான வழியை உருவாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டில்
இதன் மூலம் கிடைக்கும் பங்களிப்பு 1.75 கோடி வெள்ளி முதல் 1.8 கோடி
வெள்ளி வரை இருக்கும்.
புதிய கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் வாயிலாக வரும் 2025ஆம்
ஆண்டில் 7 கோடியே 20 லட்சம் வெள்ளியை வருமானமாக ஈட்ட இயலும்
என்று மாநில சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர்
குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் நடப்பு நிதி நிலைமை குறித்து பத்து தீகா
உறுப்பினர் டேனியல் அல் ரஷிட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
அவர் இவ்வாறு சொன்னார்.
மேலும், அடுத்து வரும் ஆண்டுகளில் மாநில அரசின் வாயிலாக கூடுதல்
வருமானத்தை பெறமுடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்
கூறினார்.
இவ்வாண்டு சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் (எம்.பி.ஐ.) 3 கோடியே 3
லட்சம் வெள்ளியை ஈட்டித் தந்துள்ள வேளையில் சிலாங்கூர் மாநில
பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) கூடுதலாக ஒரு கோடி வெள்ளி வருமானத்தைப் பெற்று நான்கு கோடி வெள்ளி இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.


