ரியோ டி ஜெனிரோ, நவ. 18 - காஸாவில் நீடித்து வரும் நெருக்கடிக்கு
விரைவான மற்றும் நீடித்த போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் அதே
வேளையில் பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உதவிப்
பொருள்கள் எந்த தடையுமின்றி விநியோகிக்கப்பட வேண்டும் என்று
மலேசியாவும் பிரேசிலும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், 1967ஆம் ஆண்டிற்கு முந்தைய வரைபடத்தின் அடிப்படையில்
தெற்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்ட, ஐக்கிய நாடுகள் சபையில்
முழு அங்கத்துவம் பெற்ற மற்றும் சுதந்திரமும் இறையாண்மையும்
கொண்ட பாலஸ்தீனத்தின் உருவாக்கத்திற்கும் இரு நாட்டுத்
தலைவர்களும் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தினர்.
ஜி20 உச்சநிலை மாநாட்டிற்கு அப்பால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் மற்றும் பிரேசில் அதிபர் லுய்ஸ் இனாசியோ லுலா டா
டிசிலவா ஆகிய்யோரிடையே நடைபெற்ற இரு தரப்பு பேச்சு
வார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்ட்ட கூட்டறிகையில் இந்த கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும
சமநிலையின்மை, பஞ்சம் மற்றும் ஏழ்மையை ஒழிப்பதில் தங்களுக்குள்ள
கடப்பாட்டையும் அவர்கள் மறுவுறுதிப்படுத்தினர்.
சுகாதாரம், ஹலால் உணவுத் தொழில்துறை, உணவு உத்தரவாதம்,
விவசாயம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம்,
செமிகண்டக்டர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு
உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அத்தலைவர்கள்
வலியுறுத்தினர்.
“பஞ்சம், பட்டினிக்கு எதிரான உலக கூட்டணி“ யின் உருவாக்கத்தையும்
அவர்கள் வரவேற்றனர். இந்த அமைப்பில் ஸ்தாபக உறுப்பினராக இணையும் மலேசியாவின் முடிவை தாம் வரவேற்பதாக அதிபர் லுலா தெரிவித்தார்.


