லண்டன், நவ 6 - இங்குள்ள யோர்க் ஷையரில் உள்ள வர்த்தக கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் நேற்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட வளாகத்தில் உள்ள அனைத்து கோழிகளும் மனிதாபிமான முறையில் அகற்றப்படும் என்பதோடு அந்த வளாகத்தைச் சுற்றி 3 கிலோ மீட்டர் அளவுக்கு பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.
பறவைக் காய்ச்சல் எனப்படும் இன்புளுயென்ஸா காய்ச்சல், சமீப ஆண்டுகளில் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பறவைகளைக் பலி கொண்டுள்ளது. படிப்படியாக பாலூட்டிகளுக்கும் பரவும் இந்த நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதற்கும் வழிவகுக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள காட்டுப் பறவைகளில் H5N5 மற்றும் H5N1 ஆகிய இரண்டு வெவ்வேறு வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அரசாங்கம் அதன் எச்சரிக்கை அளவை உயர்த்தியது.
அக்டோபர் மாத மத்தியில் அந்த அச்சுறுத்தல் அளவை பிரிட்டன் நடுத்தரத்திற்கு அதிகரித்தது. அண்மைய ஆண்டுகளில் அந்நாடு பல பறவைக் காய்ச்சல் பரவல் சம்பவங்களை எதிர்நோக்கியது. கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட பரவல் நாட்டிலேயே மிக மோசமானது என்று வர்ணிக்கப்படுகிறது.


