அங்காரா, நவ 5- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் நேற்று மேலும் 33 பேர் கொல்லப்பட்டனர். இந்த மரணங்களுடன் சேர்த்து கடந்த ஓராண்டு காலமாக அங்கு நிகழ்ந்து வரும் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,374 பேராக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நிகழ்ந்து வரும் இப்போரில் இது வரை 102,261 பேர் காயமடைந்துள்தாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிகழ்ந்த பகுதிகளை மீட்புக் குழுவினர் அணுக முடியாத நிலையில் உள்ளதால் இடிபாடுகளிலும் சாலைகளிலும் மேலும் அதிகமானானோர் சிக்கியுள்ளதாக அமைச்சு கூறியது.
உடனடிப் போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. நிறைவேற்றிய போதிலும் இஸ்ரேலியப் படைகள் கடந்த ஓராண்டு காலமாக பாலஸ்தீனத்திற்கு எதிராக கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த போரின் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த ஏறக்குறைய அனைத்து மக்களும் தங்களின் இருப்பிடத்தை இழந்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்துகளைப் பெற் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
போரை நிறுத்துவதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ தொடர்ந்து மறுத்து வரும் காரணத்தால் போர் நிறுத்தத்தை அமல்படுத்துதவற்கும் இஸ்ரேலும் ஹமாஸ் தரப்பும் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஏதுவாக அமெரிக்கா, கட்டார், எகிப்து தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு அமைதி முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
காஸாவில் மேற்கொள்ளப்படும் கொடூர படுகொலைகளுக்காக அனைத்துலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.


