ANTARABANGSA

ட்ரம்பின் வெற்றி இஸ்ரேலின் தீவிரத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் - ஈரான் அச்சம்

4 நவம்பர் 2024, 3:43 AM
ட்ரம்பின் வெற்றி இஸ்ரேலின் தீவிரத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் - ஈரான் அச்சம்

துபாய், நவ. 4 - அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனால்ட் டிரம்ப் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தங்களுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானும் அதன் நட்பு நாடுகளும் அஞ்சுகின்றன.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்புக்கும், ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறக்கூடும் என்றும் இது தங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஈரானும் லெபனான், ஈராக் மற்றும் ஏமனில் உள்ள அவர்களின் பிராந்திய நட்பு நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குவதற்கும் இலக்கு படுகொலைகளை நடத்துவதற்கும் மற்றும் தனது "அதிகபட்ச அழுத்தக் கொள்கையை" மீண்டும் சுமத்துவதற்கும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு ட்ரம்ப் அதிகாரம் அளிப்பது சாத்தியமாகும் என்பது ஈரானின் முக்கிய கவலையாக உள்ளது என ஈரான், அரபு மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2017-2021 வரை அதிபராக இருந்தவரான டிரம்ப், தானும் இஸ்ரேலும் நிர்ணயித்த நிபந்தனைகளின் அடிப்படையில் அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பதன் மூலம் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிகுந்த அழுத்தத்தை கொடுப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அமெரிக்கத் தலைமையின் இந்த சாத்தியமான மாற்றம் மத்திய கிழக்கின் அதிகார சமநிலைக்கு நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஈரானின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மறுவடிவமைக்கலாம்.

அடுத்த அமெரிக்க நிர்வாகம் ஹாரிஸ் அல்லது ட்ரம்ப் தலைமையில் இருந்தாலும் ஈரானுக்கு அது ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கு இல்லாமல் போகும் என்று ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

அதே சமயம், அந்த இஸ்லாமிய குடியரசின் ஆயுதமேந்திய பினாமிகளான காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளை தரம் தாழ்த்தும் நோக்கிலான இஸ்ரேலின் பல ஆண்டுகால இராணுவ பிரச்சாரமும் வலுப்பெறும் என கருதுகின்றனர்.

எப்படி இருப்பினும், ட்ரம்பின் நிலைப்பாடு ஈரானுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது, ஏனெனில் அவர் இஸ்ரேலுக்கு அதிக தன்னியக்க ஆதரவை வழங்குகிறார்.

டிரம்ப் ஈரானுக்கு மிகவும் கடுமையான நிபந்தனைகளை வைப்பார் அல்லது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இலக்கு தாக்குதல்களை நடத்த இஸ்ரேலை அனுமதிப்பார். ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு அவர் முழுமையாக ஒப்புதல் அளித்து வருகிறார் என்று வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் சிந்தனைக் குழுவின் தலைவர் அப்தெலாஜிஸ் அல்-சாகர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.