அம்மான், நவ. 3 - உலகளவில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் பெரும்பாலானவை தண்டிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) சனிக்கிழமை கூறியதாக ஜோர்டான் செய்தி நிறுவனம் (பெட்ரா) தெரிவித்துள்ளது.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உண்மையைத் தேடும் அத்தியாவசியப் பணிகளின் போது ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார் என்று யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அஸூலே கூறினார்.
பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்துலக தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தக் கொலைகளுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவால் ஆவணப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளில் 85 சதவிகிதம் தீர்க்கப்படாமல் இன்னும் இருப்பதாகக் கூறிய அவர், கடந்த 2023ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
இதனிடையே, இந்த தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், சமீபத்திய ஆண்டுகளில் மோதல் பகுதிகளில், குறிப்பாக காஸாவில் கடந்த பல ஆண்டுகளில் எந்தப் போரிலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
ஆயுத மோதல் சூழ்நிலைகளில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களை மதிக்கவும் பாதுகாக்கவும் கடந்த செப்டம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்கால ஒப்பந்தம் வலியுறுத்துகிறது என்பதை குட்டெரெஸ் சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்கவும், எல்லா இடங்களிலும் குற்றவாளிகளை தண்டிக்கவும் அரசுகள் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


