ஷாங்காய், நவ. 3 - சீனப் பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை தொடங்கி வரும் நவம்பர் 7 வரை சீனாவுக்குப் பணி நிமித்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஷாங்காயில் நடைபெறும் 7வது சீன அனைத்துலக இறக்குமதி கண்காட்சியில் (7வது சி.ஐ.ஐ.இ.) அவர் கலந்து கொள்கிறார்.
இந்த 7வது சி.ஐ.ஐ.இ. கண்காட்சியில் மலேசியா கவுரவ தேசமாக அழைக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.
அன்வாரின் பயணக்குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜிஸ் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெற்ற சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்க பிரதமர் லி கியாங்கைச் சந்திக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஷாங்காய் நகரில் விஸ்மா புத்ரா கூறியது.
பரஸ்பர நலன் சார்ந்த மற்றும் தொடர்புடைய பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று விஸ்மா புத்ரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.ஐ.இ. என்பது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்னெடுப்பில் (பி.ஆர்.ஐ.) ஈடுபட்டுள்ள நாடுகளின் உற்பத்தி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் தளத்தை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
இப்பயணத்தின் போது பிரதமர் பல்வேறு வணிக கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதோடு சீனாவில் உள்ள தொழில்துறை தலைவர்களுடன் ஒரு வட்டமேசை அமர்வையும் நடத்துவார்.
பிரதமர் அன்வார் நவம்பர் 6 தொடங்கி இரண்டு நாட்களுக்கு பெய்ஜிங்கிற்குச் செல்வார். அங்கு அவர் அதிபர் ஜி ஜின்பிங்குடன் மரியாதை நிமித்தச் சந்திப்பை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
மலேசியாவும் சீனாவும் அரச தந்திர உறவுகளின் 50 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் நிலையில் பிரதமரின் இந்த பயணம் வலுவான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்ந 2009 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக உலகளவில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா இருந்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சீனாவுடனான மொத்த வர்த்தகம் 45, 084 கோடி வெள்ளியாக (9,880 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது மலேசியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் 17.1 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.


