கூலிம், நவ 3- ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கில் சிக்கி இந்திய மாது
ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தீபாவளி விடுமுறையை மகிழ்ச்சியாக
கழிக்கும் நோக்கில் ஆற்றில் குளிக்கச் சென்ற இந்திய குடும்பத்திற்கு இந்த
துயரச் சம்பவம் பேரிடியை ஏற்படுத்தியது.
இங்குள்ள தாமான் இகோ ரிம்பா, சுங்கை சீடிமில் நேற்று மாலை நிகழ்ந்த
இந்த சம்பவத்தில் ஏ.கஸ்தூரி (வயது 41) என்ற மாது உயிரிழந்ததாக
கூலிம் ஹைடெக் தீயணைப்பு மற்றும் மற்றும் மீட்பு நிலையத்தின்
தலைமை உதவி ஆணையர் அஸ்மிர் ஹசான் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.02 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து ஐவரடங்கிய தீயணைப்புக் குழு சம்பவ
இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
மாலை 4.39 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்புக்
குழுவினர் பொது மக்களின் உதவியுடன் ஆற்றின் மேற்பரப்பில் தேடுதல்
நடவடிக்கையைத் தொடக்கினர்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள
லுபோக் பூலோ பகுதியில் அந்த மாதுவின் சடலம் மாலை மணி 5.50
அளவில் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
அச்சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.


