ஷா ஆலம், அக். 30- சிலாங்கூர் மாநில அரசின் ஸ்கிம் டாருள் ஏஹ்சான் திட்டத்தின் கீழ் இலவச குடிநீரைப் பெற பொது மக்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. தகுதி உள்ளவர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் அந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் சிலாங்கூரில் வசிக்கும் மற்றும் வாடகைக்கு இருக்கும் மலேசியர்களுக்காக இந்த திட்டம் பிரத்தியேகமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளை ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் அகப்பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். உண்மையில் உதவி தேவைப்படும் தரப்பினருக்கு இந்த திட்டம் பயனளிக்கும் வகையில் அமையும் என்று நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் பத்து கேவ்ஸ், சுங்கை துவா டேவான் ராக்யாட் மண்டபத்தில் நடைபெற்ற ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவில் அமிருடின் இதனைத் தெரிவித்தார்.
இந்த இலவச குடிநீர்த் திட்டத்தில் இது வரை 300,000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாதம் 20 கன மீட்டர் நீரை இலவசமாக பெறுவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இத்திட்டத்தில் மாநிலத்திலுள்ள 600,000 குடியிருப்பாளர்கள் பங்கேற்று பயன்பெறுவர் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கான வருமான வரம்பு நிபந்தனையை மாநில அரசு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தளர்த்தியது. இதன் வழி இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான வருமான வரம்பு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.
இந்த இலவச குடிநீர்த் திட்டத்திற்கு மாநில அரசு ஆண்டு தோறும் மூன்று கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன் வழி 285,673 பேர் பயன் பெற்று வருகின்றனர்.


