ஜாகர்த்தா, அக் 29 - அடுத்தாண்டு இந்தியாவிலிருந்து பத்து லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை இந்தோனேசியா பரிசீலித்து வருவதாக உணவு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஜூல்கிப்ளி ஹசான் இன்று தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் அரிசி உற்பத்தி இந்த ஆண்டு 2.43 சதவீதம் குறைந்து 3 கோடியே 34 லட்சம் மெட்ரிக் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நிலவிய நீண்ட வறண்ட வானிலைக்கு மத்தியில் நடவு மற்றும் அறுவடையில் தாமதம் ஏற்படும் என்று புள்ளியியல் மையம் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தது.
இந்தோனேசியாவின் அரிசி இறக்குமதி கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளன.
அந்த தென்கிழக்காசிய நாடு இவ்வாண்டு 36 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலக்கு வைத்துள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டில் 750,000 ஹெக்டேர் முதல் 10 லட்சம் ஹெக்டேர் புதிய நெல் வயல்களைத் திறக்க வேண்டும் என்ற அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் உணவு சுய சார்பு இலக்கை அடையவும் திட்டமிட்டுள்ளது


