காஸா நகர், அக். 25- காஸாவின் வட பகுதியில் உள்ள ஜபாலியா நகரில் உள்ள பத்து வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.
ஜபாலியாவில் மோசமான படுகொலை நிகழ்ந்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் 150 பேர் உயிரிந்தனர் அல்லது காயமடைந்தனர். அவர்களை யாராலும் காப்பாற்ற இயலவில்லை என்று காஸா பொது தற்காப்பு பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்த பகுதியில் இருந்த சிலரின் வீடுகளை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்து தாக்கியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்த பகுதியிலுள்ள குடியிருப்புகள் முழுவதிலும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதலை நடத்தின. காயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து உதவி கோரி வருகின்றனர்.
காஸாவின் வட பகுதியில் பொது தற்காப்பு படையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்வதற்கு இஸ்ரேலியப் படைகள் முற்றாக தடை விதித்துள்ள காரணத்தால் காயமடைந்தவர்களை மீட்பதற்கு அறவே வாய்ப்பு கிட்டவில்லை என பொது தற்காப்பு பிரிவு குறிப்பிட்டது.
இஸ்ரேலியப் படைகள் கடந்த மூன்று வாரங்களாக காஸாவின் வட பகுதியை முற்றுகையிட்டு வருகின்றன. குடியிருப்பாளர்களை தெற்கு நோக்கிச் செல்லும்படி பணித்துள்ள இராணுவம் அங்கு தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் 8ஆம் தேதி முதல் பாலஸ்தீனம் முதல் இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 43,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


