பெய்ரூட், அக் 24 - அண்மையில் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புல்லாவின் பொதுச்செயலாளர் ஹசான் நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த அமைப்பின் உயர்மட்ட அதிகாரி ஹஷீம் சஃபிடின் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் அவ்வமைப்பு நேற்று தெரிவித்தது.
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சஃபிடின் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியது.
நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டப் பின்னர் ஹெஸ்புல்லாவின் துணைப் பொதுச்செயலாளர் நைம் காசிமுடன் இணைந்து சஃபிடின் அந்த அமைப்பை வழிநடத்தி வந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் ஹெஸ்புல்லாவின் அடுத்த பொதுச் செயலாளராக அவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஹெஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஜிஹாத் மன்றத்திற்கு நஸ்ரல்லாவின் உறவினரான சஃபிடின் பொறுப்பேற்றிருந்தார். மேலும் அவர் ஹிஸ்புல்லாவின் நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களையும் மேற்பார்வையிட்டு வந்தார்.
இஸ்ரேலுடன் பகைமை பாராட்டி வந்த அண்மைய ஆண்டுகளில் ஹெஸ்புல்லாவுக்கு ஆதரவாகப் பேசுவதில் சஃபிடின் முக்கியப் பங்காற்றினார். இறுதியில் அது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.
லெபனானின் தெற்கு, கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து ஹெஸ்பொல்லாவின் கோட்டைகளையும் இஸ்ரேலிய தரைப்படை ஊடுருவி வருவதால் ஹெஸ்புல்லாவினர் தொடர்ந்து பின்வாங்கி வருகின்றனர்.


