பெய்ரூட், அக். 14 - கடந்த மாதம் தொடங்கி லெபனான் மீது இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,306
பேராக உயர்ந்துள்ள வேளையில் மேலும் 10,698 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 51 பேர்
பலியான வேளையில் 174 பேர் காயங்களுக்குள்ளானதாக லெபனான்
சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி
வெளியிட்டுள்ளது.
ஹெஸ்புல்லா இலக்குகளை குறி வைப்பதாகக் கூறிக் கொண்டு
இஸ்ரேல் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் லெபனான் மீது
மேற்கொண்டு வரும் கடுமையான வான் தாக்குதல்களில் 1,488 பேர்
பலியானதோடு 4,297 பேர் காயமுற்ற வேளையில் மேலும் 13 லட்சத்து 40
ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
காஸா மீதான தாக்குதலைத் இஸ்ரேல் தொடங்கியதைத் தொடர்ந்து
இஸ்ரேலிய படைகளுக்கும் ஹெஸ்புல்லா தரப்புக்கும் இடையே எல்லைப்
பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது.
கடந்தாண்டு அக்டேபார் மாதம் முதல் காஸா மீது இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 42,200க்கும் அதிகமானோர்
கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள்
மற்றும் சிறார்களாவர்.
மத்திய கிழக்கில் பிராந்திய நிலையில் போர் வெடிக்கும் என
அனைத்துலகச் சமூகம் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் இஸ்ரேல்
சற்றும் சளைக்காது காஸா மற்றும் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்
நடத்தி வருகிறது.


