வியந்தியான், அக். 8- லாவோஸ் நாட்டின் வியந்தியானில் இன்று
தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11ஆம் தேதி) வரை
நடைபெறவிருக்கும் 44 மற்றும் 45 வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய மாநாடுகளில் பங்கேற்கும் மலேசிய பேராளர் குழுவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்பார் என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்தது.
இந்த மாநாடுகளின் போது தென்சீனக் கடல் விவகாரத்தின் தனது நிலைப்பாடு, மியன்மார், பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கின் மேம்பாடுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மலேசியா எடுத்துரைக்கும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்த 44 மற்றும் 45வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய மாநாடுகள் முடிவுக்கு வரும் போது, அந்த அமைப்பின் நடப்புத் தலைவரான லாவோஸ் அந்த பதவியை மலேசியாவிடம் ஒப்படைக்கும் அடையாள நிகழ்வும் இடம் பெறும். வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்கும்.


