இஸ்தான்புல், அக் 6 - காஸா பகுதியில் தொடர் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் விடுத்துள்ள கோரிக்கையை பாலஸ்தீனர்கள் வரவேற்றுள்ளனர்.
அதிபர் மக்ரோனின் இந்த கோரிக்கை அனைத்துலகச் சட்டம் மற்றும் செல்லுபடியாகக்கூடிய அனைத்துலக தீர்மானங்களுக்கு ஏற்ப உள்ளதோடு காஸாவில் இரு நாடுகளின் தீர்வு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கொள்கையையும் வலியுறுத்துகிறது என்று பாலஸ்தீன வெளியுறவு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் இன்டர் வானொலிக்கு பேட்டியளித்த மக்ரோன், காஸா மோதலைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியியிருந்தார்.
அரசியல் தீர்வுக்குத் திரும்புவதும் காஸாவைத் தாக்க இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதுமே இன்றைய முன்னுரிமை என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் பாரிஸ் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என்றும் பிரான்ஸ் அதிபர் தெளிவுபடுத்தினார்.
அனைத்துலகச் சட்டங்களை மதித்து செயல்படும் அதேவேளையில் மேற்குக்கரை மற்றும் லெபனான் மக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்துமாறு அந்நாட்டிற்கு தொடர்ந்து ஆயுதங்களை விநியோகிக்கும் அனைத்து நாடுகளுக்கும் பாலஸ்தீன அமைச்சு கோரிக்கை விடுத்தது,
பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அந்நாட்டின் மீது விரிவான ஆயுதத் தடையை விதிக்கவும் ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலஸ்தீனம் வலியுறுத்தியது.
லெபனான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் பற்றிய பிரச்சினையை சுட்டிக் காட்டிய மக்ரோன், லெபனான் ஒரு புதிய காஸாவாக மாற முடியாது எனக் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றம் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை வெளியிட்ட போதிலும், அக்டோபர் 7 முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் தனது கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இப்போரில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்களை உள்ளடக்கிய சுமார் 41,900 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 97,100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.


