ECONOMY

சிலாங்கூர் அரசின் தீபாவளி நிகழ்வில் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும். பாப்பா ராய்டு

5 அக்டோபர் 2024, 5:28 AM
சிலாங்கூர் அரசின் தீபாவளி நிகழ்வில் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும். பாப்பா ராய்டு

(ஆர்.ராஜா)

கிள்ளான், அக். 5- இம்மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளான், லிட்டில் இந்தியா செட்டி பாடாங்கில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர்  மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளி உபசரிப்பு மூன்று முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய கோலாகலமான கொண்டாட்டமாக அமையும்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மாநில அரசின் மானியமான 50 லட்சம் வெள்ளியை வழங்குவதும் அந்த நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று என்று மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத்  துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.

இது தவிர ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்  தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 15 தொழில் முனைவோருக்கு வர்த்தக  உபகரணங்கள் வழங்கும் அங்கமும் இந்நிகழ்வில் இடம் பெறும் என்று  அவர் சொன்னார்.

மேலும், மாநிலத்தில் உள்ள ஆலயங்களுக்கு மூன்றாம் கட்ட மானியம்  வழங்கும் நிகழ்வுக்கும் இங்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வில் 68  ஆலயங்களுக்கு 600,000 வெள்ளி வழங்கப்படும் என்றார் அவர்.

இன்று இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்ற கிள்ளான் மாவட்ட  நிலையிலான ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் வேலை வாய்ப்புச் சந்தையை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசின் இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுக்கு மாநில மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்கவுள்ளதாக கூறிய  அவர், இந்தியத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் ஆகியோருக்கும்  இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக சொன்னார்.

அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி  பாடாங்கில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் இரவு 7.00 மணி தொடங்கி  நள்ளிரவு 12.00 மணி வரை பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளுடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ள இந்த கொண்டாட்டத்தில் திரளாகக்   கலந்து கொள்ளுமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.