பெய்ரூட், செப். 27- கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,540 பேராக அதிகரித்துள்ளதாக அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.
இந்த தாக்குதல்களில் இதுவரை 5,410 பேர் காயமடைந்துள்ள வேளையில் கடந்த புதன் கிழமை வரை நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியவர்களின் எண்ணிக்கை 77,100 பேராக உயர்வு கண்டுள்ளது என்று பேரிடர் இடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்தது.
பள்ளிகள், கல்வி வளாகங்கள், தொழில் கல்வி மையங்கள், வேளாண் மையங்கள் உள்ளிட்ட அரசாங்க கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நிவாரண மையங்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.
கடந்த இரு தினங்களில் சிரியா நாட்டு பிரதேசத்திற்குள் நுழைவதற்கு 15,600 சிரியா நாட்டினரும் 16,130 லெபனானியர்களும் பதிவு செய்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை தொடங்கி இதுவரை லெபான் மீது இஸ்ரேல் 7,035 வான் அல்லது குண்டு வீச்சுத் தாக்குதல்களையும் 248 பாஸ்பரஸ் குண்டு வீச்சுத் தாக்குதல்களையும் 133 துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கி லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 677 பேர் பலியாகியுள்ளதோடு 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


