பெய்ரூட்/ஜெருசலம், செப். 27 - லெபனானின் ஹெஸ்புல்லா இயக்கத்துடனான போர் நிறுத்தத்திற்கு விடுக்கப்பட்ட உலகளாவிய கோரிக்கைகளை இஸ்ரேல் நிராகரித்தது. தனது மிக நெருங்கிய சகாவான அமெரிக்காவின் கோரிக்கையை மீறி லெபனானில் தொடர் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை அது பலி கொண்டது.
இஸ்ரேலின் இந்நடவடிக்கை இப்பிராந்தியத்தில் விரிவான போருக்கு வழி வகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் தலைநகர் பெய்ரூட்டின் எல்லைகளை தாக்கியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு ஒரு பெண் உட்பட 15 பேர் காயமடைந்தனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதன் காரணமாக, ஒரே இரவில் அதாவது வியாழக்கிழமை மட்டும் மரண எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் விமானப்படை பிரிவு ஒன்றின் தலைவரான மொஹமட் சுரூர் கொல்லப்பட்டதாக இரண்டு பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின.
பல ஹெஸ்புல்லா வளாகங்கள் அமைந்துள்ள, பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் பணிபுரியும் ஒரு பகுதிக்கு அருகில் தாக்குதலுக்குப் பின்னர் புகை எழுவதைக் காண முடிந்தது. ஹிஸ்புல்லாவின் கட்டிடத்தின் சேதமடைந்த மேல் தளத்தின் படங்களை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
லெபனானுடனான எல்லையின் இஸ்ரேலியப் பகுதியில் இராணுவம் தரைவழிப் படையெடுப்பு தொடர்பான ஒத்திகையை நடத்தியது. இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பேஜர் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் சாத்தியமான அடுத்த கட்டம் தரைவழி தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.
காஸாவில் போரிடும் பாலஸ்தீன போராளிகளுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு எல்லை தாண்டிய தாக்குதல்களை ஹெஸ்புல்லா ஆரம்பி


