ANTARABANGSA

சனுசியின் மன்னிப்பை சிலாங்கூர் சுல்தான் ஏற்றுக் கொண்டார்

27 செப்டெம்பர் 2024, 4:26 AM
சனுசியின் மன்னிப்பை சிலாங்கூர் சுல்தான் ஏற்றுக் கொண்டார்

ஷா ஆலம், செப். 27 -  கடந்தாண்டு மாநிலத் தேர்தல்களின் போது ஆட்சியாளருக்கு எதிராக  அவமரியாதையாகப் பேசிய கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசியை சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்   மன்னித்துள்ளார்.

சக முஸ்லிம்கள் மற்றும் மலாய்க்காரர்களிடையிலான  ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வின் அடிப்படையில் அந்த பாஸ் தலைவரின் மன்னிப்பை தாம் ஏற்றுக்கொண்டதாக  சுல்தான் கூறினார்.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவதைக் காண  நான் விரும்பவில்லை. மன்னிப்பு கோருபவர்கள் தங்கள் கோரிக்கையில் நேர்மையாக இருக்கும்போது சக முஸ்லிம்களாகிய நாம் எப்போதும் மன்னிக்க வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின்   இன்று சிலாங்கூர் அரண்மனை மூலம்  வெளியிட்டப்பட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சனுசி இனி தனது அறிக்கைகள் மற்றும் பேச்சுக்களில் அதிக கவனத்துடன் இருக்கும் அதேவேளையில்  தலைவர் பதவிக்கும் ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

நீங்கள்  உங்கள் வார்த்தைகள் மற்றும் நடத்தைகளை எப்போதும் கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில், மக்களிடம் பேசும்போது ​​அதிக உணர்ச்சிவசப்படுவதையும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு  இந்தச் சந்தர்ப்பத்தில் டத்தோஸ்ரீக்கு நான் அறிவுரை கூற விரும்புகிறேன்.

தலைவர்கள்  கடுமையான வார்த்தைகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி  மக்களிடம்  குறிப்பாக சிலாங்கூரில் உள்ளவர்களிடம் செல்வாக்கு பெறுவதையோ அல்லது பழகுவதையோ நான் விரும்பவில்லை. உங்கள் அரசியல் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு நல்ல நடத்தை மற்றும் பேச்சு மிகவும் முக்கியம்.

ஒரு தலைவராக, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு செயலின் விளைவுகளையும் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆட்சியாளர்  அறிவுறுத்தினார்.

சிலாங்கூர் அரண்மனை கடந்த 2023   ஜூலை 11ஆம் தேதி  மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​சுல்தான் ஷராபுடினை அவமதிக்கும் வகையிலும் கண்ணியமற்ற முறையிலும்   பேசிய பேச்சுக்காக சனுசி மன்னிப்புக் கேட்டது குறித்து சுல்தானிடம் நேற்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.