சிங்கப்பூர், செப். 24 - அமைச்சர் பதவியை வகித்த போது ஊழலில் ஈடுபட்டதாகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த ஈஸ்வரன் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கிய நிலையில் புதிய திருப்பமாக குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு சிங்கப்பூர் அமைச்சரவையில் இடம் பெற்ற அவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட முதல் அமைச்சராக விளங்குகிறார்.
உயர்ந்த ஊதியம், சிறப்பான அரசு நிர்வாகம், வலுவான ஆட்சி முறை என பல பெருமைகளைக் கொண்ட ஆசியாவின் நிதி மையமாக விளங்கி வரும் அந்த குடியரசு நாட்டிற்கு இந்த ஊழல் வழக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துடைமை தொழிலதிபரான ஓங் பெங் செங்கின் வர்த்தக ஸ்தாபனத்திற்கு உதவி புரிவதற்கு கைமாறாக லட்சக்கணக்கான டாலரை கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 62 வயதான ஈஸ்வரன் கடந்தாண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
நீதித் துறைக்கு இடையூறாக இருந்தது, அமைச்சருக்கான பணி ரீதியில் தம்முடன் தொடர்பில் இருந்த நபரிடமிருந்து பொதுச் சேவை பணியாளர் என்ற முறையில் கட்டணம் செலுத்தாமல் மதிப்புள்ள பொருட்கள் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
ஈஸ்வரனுக்கு எதிராக சுமத்தப்பட்ட 35 குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு 5ஆக குறைத்துள்ளதாக சேனல் நியுஸ்ஆசியா கூறியது. எஞ்சிய 30 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும்.


