புதுடில்லி, செப்.19 - மாநில சட்ட மன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரையை இந்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக தகவல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க உதவும் என்று கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. எனினும், இந்த பரிந்துரை சர்ச்சைக்குரியது என்பதோடு நாடாளுமன்றத்திலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஏக காலத்தில் தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று கூறிய அஷ்வினி, இந்த திட்டத்திற்கு இந்தியாவின் பெரும் பகுதி இளைஞர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.
இந்த பரிந்துரையை முன்னெடுப்பதற்கு முன் அரசாங்கம் ஒருமித்த கருத்தை உருவாக்கி அனைத்து சட்ட அம்சங்களையும் கருத்தில் கொள்ளும் என அவர் சொன்னார்.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுழற்சி முறை சீர்குலைந்தது. இதன் விளைவாக தற்போது சராசரியாக ஐந்து அல்லது ஆறு மாநில தேர்தல்கள் ஒரே நேரத்தில் அல்லது தனித்தனியாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.
அடிக்கடி நடக்கும் தேர்தல்களால் அரசியல்வாதிகள் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுவதோடு தேர்தல் செலவுகளையும் அதிகரிக்கச் செய்கிறது என்று மோடியும் அவரது அரசும் கூறியுள்ளனர். ஆகவே, “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டபோது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகமாக இருந்ததைக் கடந்த ஆண்டு மோடியின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட அரசாங்கக் குழு கண்டறிந்தது.


