காஸா, செப். 15- இஸ்ரேலிய இராணுவம் கடந்த 48 மணி நேரத்தில் காஸா பகுதியில் உள்ள குடும்பங்கள் மீது நான்கு படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது இதில் குறைந்தது 64 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 155 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.
கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேலிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 41,182 பேராக உயர்ந்துள்ளது. மேலும், 95,280 பேர் இத்தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர் .
ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் மீட்பு நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தடைவிதித்து வருவதால் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய அல்லது தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களை அணுக முடியாத மற்றும் இறந்தவர்கள் உடல்களை மீட்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது


