ஹனோய், செப். 11- வியட்னாமை தாக்கிய யாகி சூறாவளியில் 141 பேர்
பலியான வேளையில் வெள்ளம் காரணமாக செந்நதியில் நீர் மட்டம்
தொடர்ந்து உயர்வு கண்டு வருவதால் தலைநகர் ஹனோய் நகரின்
சுற்றுவட்டாரம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனத்த மழையினால் உண்டான யாகி சூறாவளி வட வியட்னாமில்
நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரில்
இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 59 பேர் காணாமல்
போனதாகப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.
இந்த சூறாவளி காரணமாக சொத்துகளுக்குப் பெரும் சேதம்
ஏற்பட்டுள்ளதோடு வர்த்தகம் மற்றும் தொழில்துறை பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது.
ஹனோய் நகரில் செந்நதியின் நீர் மட்டம் நேற்று ஒரு மணி நேரத்திற்கு
பத்து சென்டிமீட்டர் உயர்வு கண்டு வந்ததாக அரசாங்க ஊடகம் நேற்று
தெரிவித்தது.
வெள்ளம் காரணமாக வீட்டிலே இருக்கும்படி மாணவர்களை இங்குள்ள
சில பள்ளிகள் கேட்டுக் கொண்டன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும்
ஆயிரணக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.


