கோலாலம்பூர், செப். 10 - காஸா நகர் மற்றும் வடக்கு காஸாவில்
சிறார்களுக்கான போலியோ தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ளச் சென்ற
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வாகன அணியை இஸ்ரேலிய
இராணுவம் எட்டு மணி நேரம் தடுத்து வைத்தது.
விரிவான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த
போதிலும் வாடி காஸா சோதனை மையத்திற்கு அப்பால் தடுத்து
நிறுத்தப்பட்ட ஐ.நா. பணியாளர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி
வரும் என அச்சுறுத்தப்பட்டனர் என்று ஐ.நா.வின் பாலஸ்தீன
அகதிகளுக்கான பணி மற்றும் உதவி ஆணையர் பிலிப் லஸாரினி
கூறினார்.
கனரக வாகனத்தால் ஐ.நா.வின் கவச வாகனம் கடுமையான
சேதத்திற்குள்ளாக்கப்பட்டதாக லஸாரினி தனது எக்ஸ் தள பதிவில்
தெரிவித்தார்.
போலியோ தடுப்பூசி இயக்கத்தை இன்று மேற்கொள்ள இயலுமா
என்பதை தாங்கள் உறுதிப்படுத்த இயலாது என அவர் மேலும் கூறினார்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், ஐ.நா.
பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான
அடக்குமுறைகளில் இது ஆகக்கடைசி சம்பவமாகும் என்றார்.
ஐ.நா.வின் வாகன அணி மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, முன்கூட்டியே
தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் சோதனை மையங்களில்
பணியாளர்கள் தடுத்து வைக்கப்படுவது போன்ற சம்பவங்களை அவர்
சுட்டிக் காட்டினார்.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு ஏற்ப ஐ.நா. பணியாளர்கள்
தங்கள் கடமையைக் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்கள் எந்நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் காஸாவும் விதிவிலக்கல்ல என்றார் அவர்.


