விளாடிவோஸ்டோக், செப். 5 - உலக வர்த்தக அமைப்பின் (டபள்யு.டி.ஓ.) விவகாரங்களுக்கான முறைசாரா ஆலோசனைக் செயல்முறையின் விளைவுகளை வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உச்ச நிலை மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகள் விவாதிக்க உள்ளதாக ரஷ்யாவில் உள்ள சீன தொழில்முனைவோர் ஒன்றியத்தின் தலைவர் ஸோ லிக்குன் கூறினார்.
உலக வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்தும் கிழக்குப் பொருளாதார ஆய்வரங்கின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
உலக வர்த்தக நிறுவனம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகள் எழும் போது ஒருவருக்கொருவர் சிறப்பாக ஒருங்கிணைக்க ஒரு முறைசாரா ஆலோசனை செயல்முறையை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஜூலை மாதம் ஒப்புக்கொண்டன.
பிரிக்ஸ் உச்ச நிலை மாநாடு அக்டோபரில் நடைபெறும் நிலையில் பல வல்லுநர்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தொடர்பான அறிக்கைகளை தயாரிப்பார்கள் என்று அவர் கூறினார்.
இந்த செயல் முறையின் செயலாக்கம் தொடர்பான முடிவுகள் கூடிய விரைவில் பெறப்படும் என்றும் ஸோ நம்பிக்கைத் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளைப் பிரதிநிதிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் சுழல் முறைத் தலைவர் பதவியை ரஷ்யா ஜனவரி மாதம் ஏற்றுக்கொண்டது.
கிழக்கு பொருளாதார ஆய்வரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நாளை வரை நடைபெறும். இது ரஷ்யாவின் பசிபிக் கடற்கரை நகரமான விளாடிவோஸ்டாக்கில் உள்ள தூர கிழக்கு கூட்டரசு பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.


