வாஷிங்டன், செப். 4- தனக்கு எதிராகக் கொண்டு வந்த திருத்தப்பட்ட
தேர்தல் மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டை முன்னாள் அமெரிக்க
அதிபர் டோனால்ட் ட்ரம்ப் மீண்டும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
ட்ரம்பின் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
ஆவணங்களில் அவர் இந்த மறுப்பைத் தெரிவித்துள்ளதாக ஜெர்மனி
நியுஸ் ஏஜென்சி (டிபிஏ) கூறியது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில்
ஆஜராவதற்கு தமக்கு வழங்கப்பட்ட உரிமையை ட்ரம்ப் விலக்கி
கொண்டுள்ளதோடு தமது சார்பாக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை
கோரும்படி தனது வழக்கறிஞர்களை அவர் பணித்துள்ளதாக அந்த
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க
குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்பும் மேலும் சிலரும் முயன்றதாக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டோனால்ட் ட்ரம்ப் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம்
தோல்வி கண்ட நிலையில் மத்திய மற்றும் ஜோர்ஜியா போன்ற
மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு நெருக்குதல்
கொடுத்ததன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற முயன்றதாகக்
கூறப்படுகிறது.
டேனால்ட் ட்ரம்புக்கு எதிரான புதிய திருத்தப்பட்ட குற்றச்சாட்டு அதே
குற்றவியல் குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது. எனினும் ட்ரம்புக்கு
எதிரான சில குற்றச்சாட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. பதவியில் இருக்கும்
போது அதிகாரப்பூர்மாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சட்டப்
பாதுகாப்பை பெறும் உரிமை அதிபர்களுக்கு உள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் திருத்தம் செய்யப்பட்டன.


