ECONOMY

இணையக் குற்றம் அதிகரிப்பின் எதிரொலி - சமூக ஊடகத் தளங்களை பொதுப் பயன்பாட்டுப் பிரிவில் வகைப்படுத்த அரசு திட்டம்

3 செப்டெம்பர் 2024, 7:26 AM
இணையக் குற்றம் அதிகரிப்பின் எதிரொலி - சமூக ஊடகத் தளங்களை பொதுப் பயன்பாட்டுப் பிரிவில் வகைப்படுத்த அரசு திட்டம்

பெட்டாலிங் ஜெயா, செப். 3 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு 15 வரை ஏமாற்று மற்றும் மோசடி தொடர்பான 32,676 உள்ளடக்கங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) நீக்கியுள்ளது. கடந்தாண்டு நீக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கங்களின் எண்ணிக்கை 6,297ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 முதல் 2024 ஏப்ரல் வரை மலேசியா இணைய மோசடி மூலம் 318 கோடி வெள்ளியை இழந்துள்ளது என்று தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதை சுட்டிக் காட்டிய அவர், சமூக ஊடகத் தள நடத்துநர்களுடன் அடிக்கடி சந்திப்புகளை நடத்திய போதிலும் இணைய குற்றங்கள் கவலை அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதை இந்த எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுகிறது என்றார்.

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் முதன்மை களமாக சமூக ஊடகத் தளங்கள் உருவாகி வருவதால் அத்தகைய சமூக ஊடகத் தளங்களை  பொது அடிப்படை வசதிகளாக வகைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நீர், மின்சாரம் அல்லது இணைய வழங்குநர் போன்ற அத்தியாவசிய சேவைகளாக பேஸ்புக், இண்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகத் தளங்கள் வகைப்படுத்தப்படும் என்பது இதன் பொருளாகும் என்றார் அவர்.

பயனீட்டாளர்களின் உரிமை பாதுகாக்கப்படுவது உறுதி செய்வதற்கும் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை குறைப்பதற்கும் ஏதுவாக அரசாங்கத்தின் ஒழுங்கு முறைக்கு உட்பட்டவையாக இந்த தளங்கள் விளங்குவதை மறு வகைப்படுத்தும் நடவடிக்கை உறுதி செய்யும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா உயர் கல்விக் கூடத்தில் 19 வது ஆசியா ஊடக உச்ச நிலை மாநாடு மற்றும் இணையக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.