காஸா நகர், செப். 3 - இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலுக்கு மத்தியில்
பத்து வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தும்
இயக்கம் காஸா தீபகற்பத்தின் மத்தியில் இரண்டாவது நாளாக நேற்று
தொடர்ந்தது.
இந்த இயக்கத்தின் முதல் நாளன்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய
நாடுகள் சபையின் பணி மற்றும் உதவி நிறுவனம் சக பங்காளிகளுடன்
இணைந்து சுமார் 87,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக உலக
சுகாதார நிறுவனத்தை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி
வெளியிட்டுள்ளது.
மிக முக்கியமான இந்த தடுப்பூசியை சிறார்களுக்குச் செலுத்துவதற்கான
நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகமை கூறியது.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக உடனடியாக
போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்றும் அது
வலியுறுத்தியது.
பாலஸ்தீனத்தில் உள்ள சுமார் 640,000 சிறார்களுக்கு போலியோ
தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு ஏதுவாக ஏழு நாட்களுக்கு மனிதாபிமான
போர் நிறுத்தத்தை அமல் செய்யும்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்
செயலாளர் அந்தோனியோ கட்ரெர்ஸ் இஸ்ரேலை கடந்த மாதம் 16ஆம்
தேதி கேட்டுக் கொண்டிருந்தார்.
பத்து வயது சிறுவன் சம்பந்தப்பட்ட முதலாவது போலியோ சம்பவம்
காஸாவில் பதிவாகியுள்ளதாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியிருந்த
நிலையில் அந்தோனியோ இந்த வேண்டுகோளை விடுத்தார்.


