ஜூரிக், செப். 1- காஸா போரில் ஈடுபட்டதற்காக அனைத்துலக கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து இஸ்ரேலை இடைநீக்கம் செய்யும் பாலஸ்தீனத்தின் கோரிக்கை மீது முடிவெடுப்பதை உலக கால்பந்து மோண்மை அமைப்பான ஃபீபா மீண்டும் தாமதப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய கால்பந்து சங்கத்திற்கு (ஐ.எப்.ஏ.) எதிராக பாலஸ்தீன கால்பந்து சங்கம் (பி.எப்.ஏ.) செய்த கொண்ட கோரிக்கையை வரும் அக்டோபர் மாதம் தாங்கள் பரிசீலிப்பதாக ஃபீபா கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.
இஸ்ரேலை இடை நீக்கம் செய்யும் பரிந்துரையை பாலஸ்தீன கால்பந்து சங்கம் கடந்த மே மாதம் முன்வைத்தது. இந்த பரிந்துரை தொடர்பில் உடனடி சட்ட மதிப்பீடு செய்வதற்கு உத்தரவிட்ட ஃபீபா, ஜூலை மாதம் நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில் இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தது.
அந்த சட்ட மதிப்பீடு ஆகஸ்டு 31ஆம் தேதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த உலக கால்பந்து சங்கம் கடந்த மாதம் அறிவித்தது.
ஆனால், தற்போது வரும் அக்டோபர் மாதம்தான் அந்த மதிப்பீடு முன்வைக்கப்படும் என அந்த அமைப்பு தற்போது கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான பரிந்துரை தொடர்பான சுயேச்சை சட்ட மதிப்பீட்டை பாலஸ்தீன கால்பந்து சங்கத்திடமிருந்து ஃபீபா பெற்றுள்ளது.


