ஜெருசலம், ஆக. 27 - காஸா மீதான இஸ்ரேலின் போர் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஜெருசலமில் உள்ள தேவாலயங்களின் தலைவர்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தை விரைவாக எட்டுமாறு அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.
போர்நிறுத்தம் மற்றும் இராணுவ பின்வாங்கலுக்கு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், எங்கள் அன்பான புனித பூமியில் (பாலஸ்தீனம்) நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என்று ஜெருசலமில் உள்ள குலபதிகள் மற்றும் தேவாலயங்களின் தலைவர்கள் ஒரு அறிக்கையில் கூறினர்.
லட்சக்கணக்கான அகதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் வீடுகள் அணுக முடியாத நிலையில் அழிக்கப்பட்டும் அல்லது பழுது பார்க்க முடியாத அளவு மோசமானதாகவும் உள்ளன. கண்மூடித்தனமான தாக்குதல்களால் வாரந்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர் அல்லது கடுமையாக காயமடைகின்றனர். எண்ணற்றோர் தொடர்ந்து பசி, தாகம் மற்றும் தொற்று நோயால் அவதிப்படுகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
காஸா போர்நிறுத்தப் பேச்சுக்களைப் குறித்து கருத்துரைத்த அந்த அறிக்கை, போரிடும் தரப்புகளின் தலைவர்கள் மரணத்தையும் அழிவையும் முடிவுக்குக் கொண்டுவருவதை விட அரசியல் கருத்தில் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது என்று குற்றஞ்சாட்டியது.
போரை முடிவுக்கு கொண்டு வரவும் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கும் பகுதிகளுக்கும் திரும்புவதற்கும் ஏதுவாக போர்நிறுத்தத்திற்கான உடன்பாட்டை எட்ட வேண்டும் என்ற தங்களின் மற்றும் அனைத்துலக சமூகத்தின் (ஐ.நா. பாதுகாப்பு மன்றத் தீர்மானம் 2735) கோரிக்கைக்கு போரிடும் தரப்பினர் செவிசாய்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன எதிர்ப்புக் குழுவான ஹமாஸுக்கும் இடையே கடந்த வியாழன் அனறு காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.
பல மாதங்களாக, அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகியவை இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம், போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் அனுமதிக்கும் உடன்பாட்டை எட்ட முயற்சி செய்து வருகின்றன.


