ஜெனிவா, ஆகஸ்ட் 27 - மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் எம்பாக்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் நேற்று உலகளாவிய இயக்கத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த வியூகத் தயார்நிலை மற்றும் மறுமொழித் திட்டம் 2024 செப்டம்பர் முதல் 2025 பிப்ரவரி வரை அமலில் இருக்கும். இதற்கு 13.5 கோடி அமெரிக்க டாலர் (63.45 கோடி வெள்ளி ) தேவைப்படுகிறது.
உலகளாவிய நிதியளிப்பின் மூலம் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வாயிலாகப் பிராந்திய மற்றும் தேசிய முயற்சிகளை ஒருங்கிணைப்பது, கண்காணிப்பு மற்றும் மறுமொழி உத்திகளை மேம்படுத்துவது, நோய் கண்டறிதல், தடுப்பூசிகளுக்கு சமமான அடைவை உறுதி செய்வது, இந்நோய் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவுவதைக் குறைப்பது, நோய்ப்பரவலை கட்டுப்பாட்டில் வைப்பது, சமூகங்களுக்கு திறனளிப்பது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நோய்த்தொற்றுச் சங்கிலித் தொடர்பை உடைக்க நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்துவதையும் இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளது.
காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் அண்டை நாடுகளில் பரவும் எம்பாக்ஸ் நோய் கட்டுப்படுத்தப்படலாம் மற்றும் நிறுத்தப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.


