கொல்கத்தா/புவனேஸ்வர், ஆக. 17 - கிழக்கு இந்திய நகரமான கொல்கத்தாவில் இம்மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் அவசர சிகிச்சை தவிர மற்ற நோயாளிகளுக்கான சேவைகள் முடங்கின.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் மருத்துவ சேவைகள் முடங்கின. மருத்துவக் கல்லூரிகளின் ஆசிரியப் பணியாளர்கள் அவசரகாலச் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் நேற்று அறிக்கையை வெளியிடப்பட்ட அரசாங்கம், பொது நலன் கருதி பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களை வலியுறுத்தியது. சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை அரசாங்கம் அமைக்கும் எனவும் அந்த அந்த அறிக்கை தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.), அரசாங்க சலுகைகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால் அது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டது.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் 31 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வேலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு புது டில்லியில் பேருந்தில் பயணம் செய்த 23 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. இந்த கோர படுகொலைச் சம்பவம் மருத்துவத் துறையினரிடையே நாடு தழுவிய எதிர்ப்பையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பொது மக்களின் கோபத்தையும் தூண்டியுள்ளது.


