புதுடில்லி, ஆக 17 - டாக்காவுடனான தனது முதல் உயர்மட்ட நிலையிலானத் தொடர்பை நேற்று ஏற்படுத்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "ஜனநாயகமும் நிலைத்தன்மையும் கொண்ட" வங்காளதேசத்திற்கு தனது ஆதரவை வழங்கினார்.
வங்களாதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸிடம் இருந்து பெறப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டதாக அனாடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்தது .
ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் வீழ்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு அதாவது கடந்த வியாழன் யூனுஸ் பதவியேற்ற பிறகு இரு தலைவர்களும் பேச்சு நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
அரசாங்கப் பணிகளில் அமல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை ஆட்சேபித்து அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு மாத காலப் போராட்டங்களுக்குப் பிறகு ஹசீனா புது டில்லிக்குத் தப்பிச் சென்றார். கடந்த ஜூலை 16ம் தேதி முதல் நிகழ்ந்துவரும் போராட்டங்களில் 580 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நடப்பு நிலவரங்கள் குறித்து யூனுஸுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன் என்று மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்காளதேசத்திற்கான ஆதரவை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. வங்களாதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அவர் (யூனுஸ்) உறுதியளித்தார் என்று மோடி மேலும் கூறினார்.


