ANTARABANGSA

முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீசார் களமிறக்கப்படுவார்- பிரிட்டிஷ் பிரதமர் கூறுகிறார்

7 ஆகஸ்ட் 2024, 4:19 AM
முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீசார் களமிறக்கப்படுவார்- பிரிட்டிஷ் பிரதமர் கூறுகிறார்

லிவர்புல், ஆக 7- முஸ்லீம் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பேரணி களை கட்டுப்படுத்த வரும் நாட்களில் அதிகளவிலான போலீசார் சாலைகளில் நிறுத்தப்படுவர் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் கூறினார்.

இங்கிலாந்தின் வடமேற்கு கடலோர நகரமான சவுட்போர்ட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாட்டின் பல நகரங்களில் கலவரம் மூண்டது. சந்தேகத்திற்குரிய நபர் புலம்பெயர்ந்த இஸ்லாமியர் என்ற தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரப்பப் பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டம் தீவிரமடைந்தது.

பள்ளிவாசல்களை குறிவைத்து வன்முறைகள் பரவி வரும் நிலையில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து புகலிடம் நாடி வந்தவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளின் கண்ணாடிகள் நொறுக்கப் பட்டதோடு “அவர்களை வெளியேற்றுங்கள்“ என்ற முழக்கமும் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான கலவரமாக இது விளங்குகிறது.

அந்நிய நாட்டினரின் மையங்கள் மற்றும அவர்களுக்கு உதவும் வழக்கறிஞர் நிறுவனங்களை வரும் புதன் கிழமை தாங்கள் இலக்காக கொள்ளவுள்ளதாக கூறும் தகவல்கள் இணையம் வழிபரப்பப் படும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாங்களும் மறியலில் ஈடுபடவுள்ளதாக பாஸிச எதிர்ப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சர்கள் மற்றும் போலீஸ் தலைவர்களுடன் நேற்று அவசர சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டிஷ் பிரதமர், சட்ட ஒழுங்கை பாதுகாக்க மேலும் அதிகமான போலீசார் சாலைகளில் நிறுத்தப்படுவர் எனக் கூறினார்.

மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி  செய்வது எங்களின் தலையாயப் பணியாகும் என அவர் சொன்னார். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தேவைப்படும் தரப்பினருக்கு உதவிகளை வழங்க காவல் துறையினர் முடிந்த அனைத்தையும் செய்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலவரம் தொடர்பில் இதுவரை 400க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 100 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.