ANTARABANGSA

வங்காளதேசத்தில் கைப்பேசி இணைய சேவை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது

29 ஜூலை 2024, 2:50 AM
வங்காளதேசத்தில் கைப்பேசி இணைய சேவை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது

டாக்கா, ஜூலை 29 - வங்களாதேசத்தில் அரசு வேலையில்  வழங்கப்படும் இட  ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்தியப் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து  கடந்த  10 நாட்களாக  முடக்கப்பட்டிருந்த  கைப்பேசிகளுக்கான இணைய சேவை நேற்று மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த சேவை நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 3.00  மணிக்கு  மீண்டும் தொடங்கப்பட்டதாகத் தபால், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப இளநிலை அமைச்சர் ஜுனைட் அகமது பாலாக் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய தொகைக்கான பேக்கேஜ் எனப்படும்  இணையத் தரவு தொகுப்பினைப் பயன்படுத்த முடியாது என்பதால் அவர்கள்  மூன்று நாட்களுக்கு 5 ஜிபி தரவை போனஸாகப் பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.

போராட்டங்களின் போது வன்முறை அதிகரித்த காரணத்தால் கடந்த  ஜூலை 17ஆம் தேதி  கைப்பேசி இணையச் சேவையையும் ஜூலை 18 ஆம் தேதி புரோட்பேண்ட் எனப்படும் அகண்ட அலைவரிசை சேவையையும் அரசாங்கம் முடக்கியது. புரோட்பேண்ட் சேவை  ஜூலை 23ஆம் தேதி  மீண்டும் தொடங்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கைக் கையாள விதிக்கப்பட்ட ஊரடங்கையும் அரசு தளர்த்தத் தொடங்கியது.

இந்தப் போராட்டம் காரணமாக கடந்த  ஜூலை 16 முதல் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுயேச்சைத் தகவல்கள்  மதிப்பிடுகின்றன. அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை வெளியிடவில்லை. பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

1971ஆம் ஆண்டு  சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசு வேலைகளில் வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரக்கோரி  ஜூலை 15ஆம் தேதி  மாணவர்கள் தொடங்கியப் பேரணி காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையிலான போராட்டமாக உருவெடுத்தது.

இந்த குழப்பத்தை அடுத்து  வேலை ஒதுக்கீட்டை குறைக்க உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. படைவீரர்களின் சந்ததியினருக்கான 30 சதவீத இடஒதுக்கீடு 5 சதவீதமாகவும், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு 2 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.