மில்வாக்கி, ஜூலை 24- ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்குப் பதிலாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள துணையதிபர் கமலா ஹிரிஸ், நேற்று தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டோனால்ட் டிரம்பை கடுமையாகச் சாடிப் பேசினார்.
தனது 17 நிமிட உரையில் ட்ரம்பின் குறைகளை ஆக்ரோஷமாகப் பட்டியலிட்ட கமலா, முன்னாள் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்த தமது பின்னணியையும் குற்றவாளியான ட்ரம்பின் பின்னணியையும் ஒப்பீடு செய்தார்.
ஹாரிஸ் தாராளவாத முன்னுரிமை பட்டியலை முன்னிலைப்படுத்திய அவர், தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கருக்கலைப்பு உரிமையை விரிவுபடுத்தவும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேர்வதை எளிதாக்கவும் துப்பாக்கி வன்முறையை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்தார்.
டோனால்ட் டிரம்ப் நம் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறார் என்று தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய மாநிலமான விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கி புறநகரில் உள்ள வெஸ்ட் அல்லிஸ் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பல்லாயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் அவர் கூறினார்.
நாம் சுதந்திரம், இரக்கம் மற்றும் சட்டத்திற்குட்பட்ட நாட்டில் வாழ விரும்புகிறோமா? அல்லது குழப்பம், பயம் மற்றும் வெறுப்பு நிறைந்த நாட்டில் வாழ விரும்புகிறோமா?" என அவர் கேள்வியெழுப்பினார்.
81 வயதான பைடனின் சிறிய அளவிலான அடக்கமான பிரச்சாரப் பாணிக்கு முற்றிலும் மாறுபட்டதாக 59 வயதான கமலாவின் தீவிரப் பிரசாரம் அமைந்துள்ளது.
கமலா மேடையேறிய போது, பார்வையாளர்கள் நடனமாடி ஹாரிஸின் அடையாள பதாகைகளை அசைத்தவாறு க-மா-லா!” என முழக்கமிட்டனர்.
ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா 44 விழுக்காட்டு ஆதரவையும் ட்ரம்ப் 42 விழுக்காட்டு ஆதரவையும் பெற்றுள்ளனர்.


