காஸா, ஜூலை 23 - காஸா நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) வாகன அணி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) வன்மையாகக் கண்டித்துள்ளதாக சின்ஹுவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் அனைத்துலகச் சட்டம் மற்றும் தீர்மானங்களை மீறுவதாக உள்ளது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.
பாலஸ்தீன மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது என்றும் அது தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஸா நகருக்குச் சென்ற ஐ.நா. வாகன அணி இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டதாகப் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸரினி நேற்று எக்ஸ் சமூக ஊடக தளத்தில் கூறினார்.
இந்தத் தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் எங்கள் குழு பாதுகாப்பு கருதி புகலிடம் தேட வேண்டியிருந்தது என்று அவர் சொன்னார்.
தங்கள் அணி ஐ.நா.வின் மேலங்கிகளை அணிந்து அந்த அமைப்பின் சின்னம் தெளிவாகக் பொறிக்கப்பட்ட கவச வாகனங்களில் பயணம் செய்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
காஸாவின் தென் வாடியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ சோதனைச் சாவடியின் முன் காத்திருந்த ஒரு வாகனம் மீது குறைந்தது ஐந்து முறை சுடப்பட்டதாகக் கூறிய அவர், இதில் அந்த வாகனம் கடுமையாகச் சேதமடைந்தது என்றார்.


