காஸா, ஜூலை 14- இஸ்ரேலிய இராணுவப் படைகள் காஸா பகுதியிலுள்ள குடும்பங்கள் மீது நிகழ்த்திய நான்கு படுகொலைத் தாக்குதல்களில் குறைந்தது 61 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 129 பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்தாண்டு அக்டோபர் 7,ஆம் தேதி முதல் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களால் இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38,443 பேராக அதிகரித்துள்ளது. மேலும், 88,481 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறினர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர் என்று பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனமான வாஃபா நேற்று தெரிவித்தது.
நேற்றுகாலை 10.30 மணியளவில் காஸா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் புகலிடமான அல்-மவாசியின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவிக்கப்பட்டது.
அல்-மவாசி பகுதியில் இஸ்ரேல் நடத்திய படுகொலைகளின் காரணமாக மரண எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தாக்குதலில் 71க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 289 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.


