கிள்ளான், ஜூன் 26- தரை அல்லது நாட்டின் கடல் வழியாக மின்னியல் கழிவுகளை இறக்குமதி செய்வது அல்லது கடத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோ-ருக்கு அதிகபட்சமாக 1 கோடி வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.
கடந்த மார்ச் மாதம் மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத் (சட்டம் 127) திருத்தம் மூலம் அபராதத் தொகை 20 மடங்கு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக இயற்கை வள அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.
இந்தச் சட்டம் வரும் ஜூலை 7 ஆம் தேதி அமல்படுத்தப்படும் எனக் கூறிய அவர், குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்யும் இச்சட்டம் அரசு பதிவேட்டில் வெளியிடப்படும் என்று சொன்னார்.
இன்றைய அதிரடி சோதனை நடவடிக்கையின் அறிக்கையை அமைச்சரவையின் ஆய்வுக்கு எடுத்துச் செல்வோம். புதிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மிகவும் நன்றாக உள்ளன. ஆனால் அவற்றின் அமலாக்கம் குறித்து மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மின்னியல் கழிவுகளை ஏற்றிய கொளகலன்கள் நுழையும் விவகாரம் தொடர்பில் மேற்கு துறைமுகத்திற்கு சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடினுடன் வருகைப் புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1974ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தை (சட்டம் 127) திருத்துவதை நோக்கமாகக் கொண்ட 2023 சுற்றுச்சூழல் தர (திருத்தம்) சட்ட மசோதாவை மக்களவை கடந்த மார்ச் 25ஆம் தேதி நிறைவேற்றியது.
அமலாக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்கவும், அபராதம் மற்றும் தண்டனையை அதிகரிக்கவும் இந்த சட்டத் திருத்தம் உதவும்.
இதற்கிடையில், கடந்த மார்ச் 21 முதல் ஜூன் 19 வரை மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மின்னியல் கழிவுகளைக் கொண்ட 106 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதாக நிக் நஸ்மி கூறினார்.


