ANTARABANGSA

ராஃபா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்- 12 பேர் பலி, பலர் காயம்

31 மே 2024, 4:14 AM
ராஃபா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்- 12 பேர் பலி, பலர் காயம்

ஜெருசலேம், மே 31 - தெற்கு காஸாவில் உள்ள ராஃபாவில் நேற்று அதிகாலை இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்  குறைந்தது 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் கடலோரப் பகுதியில் பல இடங்களில் சண்டை மூண்டுள்ளதாக காஸா மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காஸாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லையில் உள்ள ஒரு இடைப்பட்ட  மண்டலப் பகுதியை   தங்கள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேலியப் படைகள்  கூறிய ஒரு தினத்திற்கு பிறகு இஸ்ரேல் ராஃபா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஏழு மாதங்களுக்கும் மேலாக நிகழ்ந்து வரும்  போரின் போது காஸாவிற்குள் ஆயுதங்களைக் கடத்துவதற்கு பாலஸ்தீனக் குழுவான ஹமாஸ் பயன்படுத்திய இந்த  இடையகப் பகுதியை தாங்கள் கைப்பற்றியதாக அது கூறியது.

ராஃபாவின் மையப் பகுதியில்  இறந்தவரின் உடலை மீட்க முயன்ற போது  இஸ்ரேலிய படைகள் நடத்திய  விமானத் தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் பலர் காயமடைந்ததாகவும் காஸா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

காஸா நகருக்கு மேற்கே உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மற்றொரு பாலஸ்தீன ஆடவர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தெற்கு, மத்திய மற்றும் வடக்கு காசாவில் மோதல்கள் நிகழ்ந்து வருவதாக இஸ்ரேல்  அறிவித்தது. ஆனால் லட்சகணக்கான  பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ள  ராஃபாவில் ஏற்பட்ட இறப்புகள் குறித்து அது உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

ராஃபாவில் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஜாவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றமான அனைத்துலக  நீதிமன்றம் இட்ட உத்தரவை மீறி இஸ்ரேல் ராஃபா மீதானத் தாக்குதல்களைத் தொடர்ந்தது கொண்டிருக்கிறது.

காஸா முழுவதும் இஸ்ரேல் நடத்திய  வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களில் இதுவரை  36,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பிரதேசத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.