புத்ராஜெயா, மே 19- இம்மாதம் 12 முதல் 18 ஆம் தேதி வரையிலான 20 வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 14.8 விழுக்காடு அதிகரித்து 1,230ஆக பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25 முதல் இதுவரை கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக எந்த மரணமும் பதிவாகவில்லை என்று அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
19வது நோய்த் தொற்று வாரத்துடன் ஒப்பிடும்போது 20வது வாரத்தில் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் சேர்க்கை அதாவது கடுமையான நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. எனினும், மருத்துவமனையின் செயல்திறனை இது பாதிக்கவில்லை. இந்த உயர்வு 0.08 சதவீதத்தில் இருந்து 0.10 சதவீதமாக இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 0.17 சதவீதத்தில் இருந்து 0.04 சதவீதமாக குறைந்துள்ளது என அது தெரிவித்தது.
மலேசியா மற்றும் உலக அளவில் கோவிட்-19 நிலைமையை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சிங்கப்பூரில் சமீபத்திய நோய் பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் இந்நோய் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கையாள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு அதிகரித்துள்ளது.


