மலாக்கா, மே 19 - நாடு முழுவதும் மக்களுக்கு சேவை வழங்குவதற்கு ஏதுவாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தரம், திறன் மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்த மொத்தம் 84 புதிய தீயணைப்பு நிலையங்கள் தேவை என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறுகிறார்.
தற்போது, மலேசியாவில் 337 தீயணைப்பு நிலையங்கள் உள்ளதாகக் கூறிய அவர், கூடுதல் நிலையங்களின் தேவையைத் தீர்மானிக்க தீ ஆபத்து இடர் குறியீடு ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
எனவே, அவசரத் தேவைகள் உள்ள எந்தவொரு பகுதிக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டின் நிதி நிலையைப் பொறுத்து கட்டுமானப் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்குள்ள பண்டா ஹிலிர் சுதந்திரப் பிரகடன நினைவிடத்தில் 2024 மலேசிய மடாணியுடன் ஓட்டப்பந்தய நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுமார் 6,000 பேர் பங்கேற்ற இந்த ஓட்டப்பந்தயத்தை மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் 84 புதிய தீயணைப்பு நிலையங்களுடன் சேர்த்து ஏற்கனவே உள்ள நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையுடன் சீரமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது நாடு முழுவதும் கிட்டத்தட்ட 15,000 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் கிட்டத்தட்ட முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன என்று ங்கா மேலும் தெரிவித்தார்.
இவ்வாண்டு பணியிடங்களை நிரப்புவதற்கு சுமார் 509 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், தற்போதைய தென்மேற்கு பருவமழை காலத்தில் திறந்தவெளி தீயிடலில் ஈடுபடும் பொறுப்பற்ற தரப்பினருக்கு குற்றப்பதிவுகளை வெளியிடும்படி ஊராட்சி மன்றங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கடந்தாண்டு திறந்தவெளி தீயிடல் சம்பவங்கள் காரணமாக காரணமாக நாட்டிற்கு 260 கோடி வெள்ளிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.


