கிள்ளான், மே 18- கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.) 2023 ஆம் ஆண்டு சிறந்த ஊழியருக்கான விருதளிப்பு நிகழ்வு நேற்றிரவு இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்றது. இந்த விருதளிப்பு நிகழ்வில் மாநகர் மன்றத்தின் 128 பணியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
இந்த விருதளிப்பு நிகழ்வுக்கு மாநில அரசு துணைச் செயலாளர் (மேம்பாடு) டத்தோ ஜோஹாரி அனுவார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் கடந்தாண்டு பணி ஓய்வு பெற்ற 40 ஊழியர்களும் சிறப்பு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ ஜோஹாரி, மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் அனைத்து ஊராட்சி மன்றங்களும் முழுமையான கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதை எம்.பி.டி.கே. கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் சுற்றுப்புறத்தை மேம்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்கவும் இயலும் என அவர் குறிப்பிட்டார்.
அனைத்து ஊழியர்களின் பங்களிப்பும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.
சிறந்த சேவைக்கான விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட ஜோஹாரி, சேவைத் தரத்தை மேலும் உயர்த்துவதற்கு இந்த அங்கீகாரம் அவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கும் என்றும் குறிப்பிட்டார்.


