ஷா ஆலம், மே 18- சிலாங்கூர் இளைஞர் இயக்கத்தின் (பி.இ.பி.எஸ்.) 208 உறுப்பினர்கள் நேற்றிரவு இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
முன்பு வட்டார இளைஞர் இயக்கம் (பி.இ.பி.டி.) என அழைக்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது பெயர் மாற்றம் பெற்றாலும் கடந்த 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போது வரையப்பட்ட கோட்பாட்டை அது தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது என்று இளைஞர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
கோட்பாடு ஒரே மாதிரியானது தான். அதாவது குறைந்த பட்சம் 18 வயதுடைய அந்த உறுப்பினர்கள் அடிமட்ட நிலையில் சென்று மாநில அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பரப்புவர்.
இளைஞர்களுக்கு உதவும் வகையில் எதிர்காலத்தில் திட்டங்களை பல்வகைப் படுத்துவதற்காக பி.இ.பி.எஸ். திட்டங்களுடன் சிலாங்கூர் இளைஞர் கொள்கை மற்றும் ராக்கான் மூடாவின் 10 அடிப்படைக் கூறுகளை ஒருங்கிணைக்க உள்ளோம் என்றார் அவர்.
இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற பி.இ.பி.எஸ். விளக்கமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் கல்வி மற்றும் தேசியவாத உணர்வுகளை ஊட்டக்கூடிய நிகழ்வுகளை பி.இ.பி.எஸ். உறுப்பினர்கள் அதிகளவில் நடத்துவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
எதிர்கால தலைமுறையினர் மத்தியில் சிறந்த தலைவர்களை உருவாக்குவதற்கு ஏதுவாக பி.இ.பி.எஸ். உறுப்பினர்கள் இந்த தளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வர் என நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் வட்டார இளைஞர் இயக்கம் என்ற பெயரில் உருவாக்கம் கண்ட இந்த அமைப்பு கடந்த 2021ஆம் ஆண்டு சிலாங்கூர் இளைஞர் இயக்கம் என பெயர் மாற்றம் கண்டது.


