ஜெனீவா, மே 18- காஸா தீபகற்பத்தில் கடந்த 10 நாட்களாக மருத்துவப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதோடு முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் இஸ்ரேல் மூர்க்கத்தனமான தாக்குதல் தொடர்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியது.
காஸாவிலிருந்து ராஃபாவுக்கான கடப்பு பாதையை இஸ்ரேல் மூடியது "கடினமான சூழ்நிலைக்கு" வழிவகுத்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளரான தாரிக் ஜேசாரிவிக்கை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்துள்ளது.
காஸாவில் நாங்கள் கடைசியாக மே 6ஆம் தேதிக்கு முன்புதான் மருந்துகளைப் பெற்றோம் என்று அவர் கூறினார்.
கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான எரிபொருள் விநியோகம் பற்றிய கவலைதான் எங்களுக்கு மிகப்பெரிதாக உள்ளது என்று அவர் சொன்னார்.
காஸாவில் உள்ள சுகாதார வசதிகள் தொடர்ந்து செயல்பட ஒரு மாதத்திற்கு 18 லட்சம் லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. எல்லை மூடப்பட்டதிலிருந்து 159,000 லிட்டர் எரிபொருள் மட்டுமே ராஃபாவிற்குள் நுழைந்து உள்ளது. இது நிச்சயமாக போதாது என்று ஜேசாரிவிக் தெரிவித்தார்.


