கோலாலம்பூர், மே 18 - ஜொகூரில் இருபதுக்கும் மேற்பட்ட ஜெமா இஸ்லாமியா (ஜே.ஐ.) அமைப்பின் உறுப்பினர்கள் இருப்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தஸைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை உலு திராம் காவல் நிலையத்தின் மீது அந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஜே.ஐ. தீவிரவாதக் கும்பலின் நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் மரணமடைந்ததோடு மற்றொருவர் பலத்தக் காயமடைந்தார். சந்தேக நபரும் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மற்ற பகுதிகளில் கணக்கில் வராதவர்களும் இருக்கக்கூடும் என்பதால் இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புவதற்கு காரணம் உள்ளது என்று ரஸாருடின் சொன்னார்.
அனைத்தும் காவல்துறையின் விசாரணையில் உள்ளன என்று என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார் .
உலு திராம் போலீஸ் நிலையம் மீதான தாக்குதல் தவிர, நேற்று காலை நிகழ்ந்த தாக்குதல் தொடர்புடையது எனக் கருதப்படும் மற்றொரு சம்பவத்தையும் போலீஸார் முறியடித்துள்ளனர். ஆனால், அது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.
நேற்று அதிகாலை 2.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் உலு திராம் காவல் நிலையத்திற்கு வந்து ஒரு காவலரை கத்தியால் தாக்கியதோடு தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அவரையும் மற்றொரு காவலரையும் சுட்டுக் கொன்று மேலும் ஒருவரைக் சுட்டுக் காயப்படுத்தினார். போலீசாரின் பதில் தாக்குதலில் சந்தேக நபரும் பலியானார்.


