அஸ்தானா, மே 18- மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் புதிய தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வர்த்தக சமூகம் தொடர்ந்து ஆராய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி, கட்டுமானம், சுற்றுலா மற்றும் பயனீட்டுப் பொருட்கள் போன்ற துறைகளில் மலேசியா முன்னுரிமை அளிப்பதாக நிதியமைச்சருமான அவர் கூறினார்.
வர்த்தக சமூகம் வெளிநாடுகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான வசதிகளையும் ஆதரவையும் அரசாங்கம் எப்போதும் வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், வர்த்தக சமூகம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்பதோடு சாத்தியமான வாய்ப்புகளையும் தீவிரமாக தேட வேண்டும் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற கஜகஸ்தான்-மலேசியா முதலீட்டு வட்ட மேசை அமர்வில் ஆற்றிய முக்கிய உரையில் கூறினார்.
இந்நிகழ்வில் கஜகஸ்தான் பிரதமர் ஓல்சாஸ் பெக்டெனோவும் கலந்து கொண்டார்.
கலந்துரையாடலுக்குப் பிறகு, அன்வாரும் பெக்டெனோவும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்படும் நிகழ்வைப் பார்வையிட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக கஜகஸ்தானுக்கு இரண்டு நாள் பணிநிமித்தப் பயணம் மேற்கொண்டு அன்வார் நேற்று முன்தினம் இங்கு வந்தார்.
மலேசிய தூதுக்குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ், சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
உலகின் ஒன்பதாவது பெரிய நாடான கஜகஸ்தானில் சுமார் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்களாவர்.
இந்நாடு ரஷ்யா, சீனா, கிர்கிஸ் குடியரசு, உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் காஸ்பியன் கடலின் பெரும் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. அதன் முக்கிய ஏற்றுமதி எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற பொருட்கள். கோதுமையின் முக்கிய உற்பத்தியாளராகவும் இந்நாடு உள்ளது.


